ஞாயிறு, 29 மே, 2011

ஒரு லங்காவி அனுபவம் !

சின்ன வயசிலேயிருந்தே ஆவி , பூதம் எதிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.இருந்தாலும் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் எங்கள் குடும்பமாக [ மொத்தம்24பேர்] லங்காவி சென்றிருந்தோம். அது ஒரு ஷெல்லெட் வகையை சேர்ந்த வீடு. ஒரு ஹால், இரண்டு அறைகளைக் கொண்ட வீடு அது.ஒரு அறைக்கும் அடுத்த அறைக்கும் இடையில் ஒரு நுழைவு வாசல் இருந்தது. அதாவது இந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு போக முடியும். அடுத்த அறையில்தான்கழிவறை அமைந்திருந்தது. இரவு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நள்ளிரவுக்குப் பிறகுதான் தூங்க தொடங்கினோம். நான் பொதுவாகவே எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் காலையில் காலையில் தன்னிச்சையாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.அன்றும் அதேபோல் தூக்கம் போய் விட்டது. இருந்தாலும் உடல் சோர்வாக இருந்ததாலும் மணி என்னவென்று தெரியாததாலும் படுத்தே இருந்தேன்
என் கைக் கடிகாரம் எதிரிலிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு படுத்துவிட்டதினால், அதை எடுத்துப் பார்க்க சோம்பல் பட்டுக் கொண்டுயாராவது எழுந்தால் கேட்டுகொள்ளலாம் என்று விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தேன்.
என் இரட்டைக் கட்டிலில் என்னுடன் என் தங்கை படுத்திருந்தார். பக்கத்தில் இதேபோன்ற கட்டிலில் என் அக்காவின் மகள்,அவரின் இரண்டு பிள்ளகளுடன் படுத்திருந்தவர் [ அவர் எழுந்ததை நான் பார்க்க இயலாத அளவில்தான் எங்கள் படுக்கை அமைப்பு இருந்தது]
எங்கள் அறையிலிருந்து அடுத்த அறைக்குப் போவதைப் பார்த்தேன். ஒரு வெள்ளை நிற நைட்டீ யில் [ அந்த நைட்டீயில் அவரை அவரின் திருமணத்துக்கு முன்பு பார்த்திருக்கிரேன்.] அப்பொழுதும் நான் யோசித்தேன் ஏறக்குறைய பத்து வருடத்துக்கு முந்திய நைட்டீயை இப்பொழுதும் போட்டுக் கொண்டிருக்கிறாரேஎன்று.] கடந்து போவதை பார்த்தேன்.போனவர் திரும்பி வருவார், அவர் படுப்பதற்குள் மணி என்னவென்று அவரைப் பார்க்க சொல்ல வேண்டும் என்பதற்காக, வைத்த கண் வாங்காமல் அந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் போனவர் ஏறக்குறைய பத்து நிமிடத்துக்கு மேலாகியும் திரும்பவில்லை.
ஏன் , என்ன காரணம் என்று அறிவதற்காக நானும் படுக்கையை விட்டு எழுந்தேன், அதிர்ச்சியுடன் மீண்டும் படுக்கையிலேயே பொத்தென்று அமர்ந்து விட்டேன், ஏனென்றால் என் பக்கத்துப் படுக்கையில் பச்சைக் கலர் நைட்டீயில் தன் இரண்டு பிள்ளைகளுக்கு இடையில் என் அக்காமகள் படுத்திருப்பதைப் பார்த்தேன். ஓடிச் சென்று அடுத்த அறையில் வேறுயாரும் வெள்ளை நைட்டீயில் படுத்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்.
அக்கா மகளை எழுப்பி இந்த விஷயத்தை சொன்னேன் ‘ எப்படி சித்தி அவ்வளவு பழைய நைட்டீ இன்னும் இருக்கும் ,அது எப்பவோ தூக்கி வீசியாகி விட்டதே’ என்றார். இதில் பாராட்டு வேறு,இன்னும் அந்தப் பழைய நைட்டீயை நினைவு வச்சிருகீங்களே என்று.அதோடு அந்த விடிகாலையிலேயே எல்லோரும் எழுந்து விட்டார்கள். விடிந்த பிறகு அங்குள்ள வேலையாட்களை விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, அங்கு ஏற்கெனெவே’…………..’ நடமாட்டம் உண்டு என்று. பேயாவது பிசாசாவது அதெல்லாம் சுத்த பிரமை என்று இப்பொழுதெல்லாம் நான் சொல்லுவதே கிடையாது